வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சொல்-பெயர்ச்சொல் பகுதி 2

அஃறிணைப் பெயர்கள்

து விகுதி பெற்று வருவன-ஒருமை (அது,இது,உது,அஃது,இஃது,உஃது,எது,யாது,ஏது,குறியது,நெடியது)

அ,ஐ விகுதி பெற்று வருவன-பன்மை
(அவை,இவை,உவை,எவை,யாவை,பிற,மற்றையன,நல்லவை,தீயவை)

ஒருமிக்கும் பன்மைக்கும் பொதுவானவை

  • கள் விகுதி பெற்று  உதாரணம் பசுக்கள்-பசு
  • வினை முடிவால்
        உதாரணம்:
        யானை வந்தது-ஒருமை
        யானை வந்தன-பன்மை
  • எண்ணுப் பெயர்களை அடைமொழியாகக் கொண்டு
       உதாரணம்: ஒரு யானை,பத்து யானை, இரண்டு ஆடு,பத்து ஆடு
அஃறிணைப் பெயர்களிலும் சிலவற்றில் ஆண் பெண் பகுப்பு உண்டு அவற்றுள் சில் இங்கு காண்போம்.
ஆண் - பெண்
களிறு-பிடி
கலை-பிணை
எருது-பசு
சேவல்-பேடு
கடுவன் -பெட்டை 
மேற்கூறிய விளக்கங்கள் மூலம் அஃறிணைப் பெயர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.இனி தொல்காப்பிய விளக்கத்தை காண்போம்.

அது இது உது என வரூஉம் பெயரும்
அவை முத லாகிய ஆய்தப் பெயரும்
அவை இவை உவை என வரூஉம் பெயரும்
அவை முதலாகிய வகரப் பெயரும்
யாது யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பாலறி வந்த அஃறினைப் பெயரே.

 அது இது உது என வரும் பெயர்களும்,அஃது இஃது உஃது என வரும் பெயர்களும், அவை இவை உவை என வரும் பெயரும், அவ் இவ் உவ் என வரும் பெயரும், யாது,யா யாவை எனும் பெயரும் பால் விளங்குமாறு வந்த அஃறிணைப் பெயர்களாகும்.

பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயரும்
ஒப்பின் ஆகி பெயர்நிலை உள்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோடன்ன.
பல்ல பல சில இல்ல என்பனவும்,வருவது போன்ற வினைப் பெயரும்,கரியது போன்ற பண்புகொள் பெயரும்,பத்து போன்ற எண்ணுப் பெயரும் ,பொன்னானது போன்ற ஒப்புப் பெயரும் பாலை உணர்த்தி நிற்கும் அஃறிணைப் பெயர்களாகும்.
கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சொற்கே

கள் என்னும் விகுதியோடு இணையும் தன்மையுள்ள பெயர்கள் அவற்றிடம் சேர்ந்தவிடத்துப் பலவறிச் சொல்லாம்.

அன்ன பிறவும் அஃறினை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அகத்திணை யவ்வே.

மேற்கூறப்பட்ட பெயர் போன்று பிற பெயர்களும் அஃறிணையிடத்துப் பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்குமாறு வருகின்ற எல்லாப் பெயர்களும் அஃறிணைக்கு உரியனவாம்.

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.

தெளிவாக உணரப்படுகின்ற அஃறிணை இயற்பெயர் பன்மை விகுதியுடன் புணராது,அதற்குரிய வினையோடு வருமிடத்து,ஒருமை பன்மையை உணர்த்தும்.


 

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக