செவ்வாய், 27 ஏப்ரல், 2010

சொல் வகைகள்-பெயர்ச் சொல் பகுதி 1

பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
பெயர்ச்சொற்கள் உயர் திணைக்கு வருவனவும்,அஃறிணைக்கு வருவனவும்,பொதுத் திணைக்கு வருவனவும் என மூன்று வகைப்படும்.
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர் திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஒன்ன உரிமையும் 
அம்மூ வுருபின் தோன்ற லாறே  -தொல்காப்பியம்

உயர் திணை ஆண்பால்,பெண்பால்,பலவின்பால் என மூன்று வகைப்படும். அஃறிணை ஒன்றன்பால்,பலவின்பால் என இரு வகைப்படும்.இவை ஐந்தும் படர்க்கைச் சொற்களாகும்.தன்மை ,முன்னிலை சொற்களில் பாற் பாகுபாடு இல்லை.அவை ஒருமை,பன்மை மட்டுமே குறிக்கும்.
இவற்றில் ஆண்பால்,பெண்பால் மற்றும் பலவின் பால் சொற்களைப்பற்றி தொல்காப்பியத்தில் கூறியுள்ளதை இங்கு காண்போம்.இதன் பொருள் தங்களுக்கு எளிதாக விளங்கும் என எண்ணுகிறேன்.தெரியாதவர்கள் பாடல்களின் இறுதியில் காணவும்

அவன்இவன் உவனென வரூஉம் பெயர்களும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயர்களும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயர்களும்
யான் யாம் நாம் என வரூஉம் பெயர்களும்
யாவன் யாவள் யாவர் என்னும்
ஆவயின் அம்மூன்றொடு அப்பதினைந்தும்
பாலறி வந்த உயர்திணைப் பெயர்களே.

ஆண்மை அடுத்த மகன்என் கிளவியும்
பெண்மை அடுத்த மகள்என் கிளவியும்
பெண்மை அடுத்த இகர இறுதியும்
நம்ஊர்ந்து வரூஉம் இகார ஐகாரமும்
முறைமை சுட்டா மகனும் மகளும்
மாந்தர் மக்கள் என்னும் பெயரும்
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்
சுட்டு முதலாகிய அன்னும் ஆனும்
அவை முதலாகிய பெண்டுஎன் ஆனும்
அவை முதலாகிய பெண்டுஎன் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
அப்பதினைந்தும் அவ்ற்றோ ரன்ன.

எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகளென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.

நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகோள் பெயரே
பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த திணை நிலைப் பெயரே
கூடிவரும் வழக்கின் ஆடியற்பெயரே
இன்றி இவரென்னும்எண்ணியற் பெயரொடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே.

அன்ன பிறவும் உயர்திணை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.
மேற்கண்ட பாடல்களின் மூலம் அறியப்படுவது யாதெனின்,
அவன்,இவன்,உவன் ,அவள், இவள், உவள், அவர் ,இவர்,உவர், யான் யாம்,யாவர்,நாம் ,யாவன் ,யாவள் ஆகிய பதினைந்து சொற்களும் பாலை உணர்த்தும் உயர்திணைப் பெயர்களாம்.
ஆண்மகன்,பெண்மகள்,பெண்டாட்டி, நம்பி, நங்கை, மகன், மகள்,மாந்தர், மக்கள்,ஆடூஉ,மகடூஉ, அவ்வாளன்,அம்மாட்டன், அப்பெண்டு,பொன்னன்னான் இப்பதினைந்தும் அத்தன்மையாகவே பாலை வெளிப்படையாக உணர்த்தும் உயர்திணைப் பெயர்களாம்.
எல்லாரும்,எல்லீரும்,பெண்மகள் மூன்றும் பாலுணர்த்தும் உயர்திணைப் பெயர்களாம்.
சோழியன் போன்ற நிலப்பெயரும்,மலையமான் போன்ற குடிப்பெயரும், அவையத்தார் போன்ற குழுவின் பெயரும், சொல்வார் போன்ற வினைப் பெயரும், வெற்பன் போன்ற உடைப் பெயரும், கரியான் போன்ற பண்புகொள் பெயரும், பெருங்கையர் போன்ற சினை நிலைப் பெயரும், ஆயர் போன்ற திணை நிலைப் பெயரும், பட்டி புத்திரர் போன்ற ஆடியற்பெயரும், ஒருவர் முதலிய எண்ணியற் பெயரும் ஆகிய எல்லாம், பாலை உணர்த்தும் உயர் திணைப் பெயர்களாம்.
மேற்கூறப்பட்ட போன்றவான பெயர்களும் உயர்திணையிடத்துப் பன்மையாகவும்,ஒருமையாகவும்பாலை உணர்த்தி வரும் எல்லாப் பெயரும் உயர்திணைப் பெயராம்.மீண்டும் சந்திப்போம்.






0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக