புதன், 14 ஏப்ரல், 2010

எழுத்து-சார்பெழுத்துக்கள் பகுதி 4

5.உயிரெளபடை
புலவர்கள் தாம் இயற்றும் செய்யுள்களில் ஓசை குறையும்போது ,அவ்விடத்திலுள்ள எழுத்தோடு இன எழுத்தை சேர்த்து செய்யுளை நிறைவு செய்வர்.இதற்கு அளபெடை என்று பெயர்.அதாவது இருக்கும் அளவைக் காட்டிலும் மிகுந்து ஒலிக்கச் செய்வது அளபெடையாகும்.

உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அதனை உயிரெளபடை எனவும் மெய்யெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அதனை ஒற்றெளபடை எனவும் வழங்குவர்.
உயிரெளபடை மூன்று வகைப்படும்.அவை
1.செய்யுளிசை அளபெடை
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்
இக்குறட்பாவில் உழாஅர் என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது.உழார் என்பது இயல்பான சொல்.இது செய்யுளின் இடையில் வந்து ஓரசையாகி ஓசை குறைந்து நிற்கிறது.இதனை நிறைவு செய்ய சொல்லின் இடையில் உள்ள ஆ என்னும் எழுத்து தனக்குரிய இரண்டு மாத்திரை அளவினின்று மிகுந்து ஒலிக்கிறது.இதற்கு அடையாளமாக இவ்வெழுத்தின் இனமான அ என்னும் குறிலெழுத்து  குறிக்கப்ப்டுள்ளது.
இவ்வாறு செய்யுளில் ஓசையை னிறைவு செய்வதன் பொருட்டு ,சொல்லின் முதல்,இடை,கடையில் உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசை அளபெடையாகும்.இதை இசை நிறை அளபெடை எனவும் வழங்குவர்.
ஓஒதல்வேண்டும்-முதலில் அளபெடுத்துள்ளது
தொழாஅர்-இடை
நடுவொரீஇ-கடை

2.இன்னிசை அளபெடை
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வமாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
இக் குறளில் 'கெடுப்பதும்', 'எடுப்பதும்' என்று இருந்தாலும் ஓசை குறைவதில்லை (தளையும் தட்டுவதில்லை) ஆயினும் இனிய ஓசை தருவதற்காக 'கெடுப்பதும்', 'எடுப்பதும்' என்பவற்றில் உள்ள 'து' என்ற உயிர்மெய்க்குறில் 'தூ' என்று நெடிலாகி 'தூஉ' என அளபெடுத்து நிற்கிறது.இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிய ஓசை தருவதற்காக உயிர்க் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.

3சொல்லிசை அளபெடை
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
இக்குறட்பாவில் தழீ என்றிருப்பினும் ஓசை குறைவதில்லை.ஆனால் தழீ என்னும் சொல் தழுவுதல் என்னும் பொருள் தரும் பெயர்ச்சொல்லாகும்.அச்சொல் தழீஇ என அளபெடுத்து தழுவி எனும் வினையெச்ச சொல்லாயிற்று.இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் ஒரு சொல் வினையெச்சப் பொருளாவதற்கு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்பெயர்.
6.ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

எ.கா:
வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை கானலாம்.
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக