சீர்
இருவகை அசைகளும் தனித்தோ இணைந்தோ அமைவது சீர் எனப்படும்.அஃது ஓரசைச் சீர்,ஈரசைச் சீர் ,மூவசைச் சீர் ,நான்கசைச் சீர் என நான்கு வகைப்படும்.
ஓரசைச்சீர்
வெண்பாவின் ஈற்றில் நேரசை நிரையசையுள் ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும்.அவை அசைச்சீர் எனப்படும்.அவற்றிற்கு வாய்ப்பாடு நாள்(ஓரசை நேர்) , மலர்(ஓரசை நிறை) என்பனவாம்
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளம்குன்றிக் கால்
கால்-நேர்-நாள்(வாய்ப்பாடு)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை
தலை-நிரை-மலர்(வாய்ப்பாடு)
இவ்வாறு இலக்கண முறைப்படி,வெண்பாவின் ஈற்றில் ஒரு நேரசையாகவோ நிரையசையாகவோ தனித்து வந்தால் அவற்றிற்கு முறையே நாள்,மலர் என வாய்ப்பாடு கூற வேண்டும்.
ஆய்வுச்செய்தி
திருக்குறளில் 174 குறட்பாக்களின் ஈற்றுச்சீர் நாள் வாய்ப்பாட்டிலும்,665 குறட்பாக்களின் ஈற்றுச் சீர் மலர் வாய்ப்பாட்டினுலும் அமைந்துள்ளது என திருக்குறள் பதின்கவனகர் திரு.இராமய்யா அவர்கள் கூறுகிறார்.
காசு,பிறப்பு
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பெற
செய்யாமை செய்யமை நன்று.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
நன்று-நன்/று-நேர்பு
விளக்கு-விளக்/கு-நிரைபு
இவ்வாறு வெண்பாவின் ஈற்றில் நேரசை,நிரையசையாக தனித்து வருவதோடு மட்டுமல்லாமல் நேர்பு,நிரைபு என குற்றியலுகர வாய்ப்பாட்டுச் சீர்களும் அமைவதுண்டு.
முதலசை நேர் நேர்பு எனவும்,முதலிசை நிரை நிரைபு எனவும் வழங்கப்படுகிறது.நேர்பு-காசு,நிரைபு-பிறப்பு
ஈரசைச் சீர்
நேர், நிரை என்னும் அசைகள் இரண்டிரண்டாக இணைந்து வரும் சீர்கள் ஈரசை சீராகும்.ஈரசைச்சீர் மாச்சீர் இரண்டும்,விளச்சீர் இரண்டுமாய் நான்கும் ஆசிரியப் பாவிற்குரியனவாகும்.இவை இயற்சீர் எனவும் ஆசிரிய உரிச்சீர் எனவும் வழஙப்படும்.
மூவசைச்சீர்
மாவின முன்னா காய்கனி உடையபின்
வெண்பா வஞ்சி யுரிச்சீர் ஆமே
ஈரசைச் சீர் நான்கனோடும் ,நேரசை நிரையசை இரண்டினையும் தனித் தனியாக இறுதியில் இணைத்தால் மூவசைச்சீர் எட்டாகும்.அவற்றுள் காய் என முடிபவை நான்கும்,கனி என முடிபவை நான்கும் உள்ளன.
காய்ச்சீர் நான்கிலும் நேரசை ஈற்றசையாக வரும்.இச்சீர்கள் வெண்பாவிற்குரியதால் வெண்பாவுரிச்சீர் எனவும் வழங்கப்படும்.
கனிச்சீர் நான்கிலும் நிரையசை ஈற்றசையாக வரும்.இச்சீர்கள் வஞ்சிப் பாவிற்குரியதால் வஞ்சியுரிச்சீர் எனவும் வழங்குவர்.
நான்கசைச்சீர்
மூவசைச் சீருடன் நேரசை, நிரையசைகளை இறுதியில் சேர்த்தால் நாலசைச்சீர் பதினாறாம்.இதை பொதுச்சீர் எனவும் வழங்குவர்.
இதில் நேரீற்றுப் பொதுச்சீர் எட்டும்,னிரையீற்றுப் பொதுச்சீர் எட்டும் உள்ளன.
சீர் வகைகளும் அதன் வாய்ப்பாடுகளும்
வ.எண் | சீர் வகை/அசை | வாய்ப்பாடு | துணைப்பெயர்கள் |
1 | ஓரசைச்சீர் | ||
நேர் | நாள் | ||
நிரை | மலர் | ||
நேர்பு | காசு | ||
நிரைபு | பிறப்பு | ||
2 | ஈரசைச்சீர் (ஆசிரியவுரிச்சீர்) | ||
நேர்+நேர் | நேர்மா | மாச்சீர் | |
நிரை+நேர் | நிரைமா | ||
நிரை+நிரை | கருவிளம் | விளச்சீர் | |
நேர்+நிரை | கூவிளம் | ||
3 | மூவசைச்சீர் | ||
நேர்+நேர்+நேர் | தேமாங்காய் | காய்ச்சீர் (வெண்பாயுரிச்சீர்) | |
நிரை+நேர்+நேர் | புளிமாங்காய் | ||
நிரை+நிரை+நேர் | கருவிள்ங்காய் | ||
நேர்+நிரை+நேர் | கூவிளங்காய் | ||
நேர்+நேர்+நிரை | தேமாங்கனி | கனிச்சீர் (வஞ்சியுரிச்சீர்) | |
நிரை+நேர்+நிரை | புளிமாங்கனி | ||
நிரை+நிரை+நிரை | கருவிளங்கனி | ||
நேர்+நிரை+நிரை | கூவிளங்கனி | ||
4 | நாலசைச்சீர்(பொதுச்சீர்) | ||
நேர்+நேர்+நேர்+நேர் | தேமாந்தன்பூ | பூச்சீர்(நேரீற்றுப் பொதுச்சீர்) | |
நிரை+நேர்+நேர்+நேர் | புளிமாந்தன்பூ | ||
நிரை+நிரை+நேர்+நேர் | கருவிளந்தன்பூ | ||
நேர்+நிரை+நேர்+நேர் | கூவிளந்தன்பூ | ||
நேர்+நேர்+நிரை+நேர் | தேமநறும்பூ | ||
நிரை+நேர்+நிரை+நேர் | புளிமாநறும்பூ | ||
நிரை+நிரை+நிரை+நேர் | கருவிளந்றும்பூ | ||
நேர்+நிரை+நிரை+நேர் | கூவிள்நறும்பூ | ||
நேர்+நேர்+நேர்+நிரை | தேமாந்த்தண்ணிழல் | நிழற்சீர் (நிரையீற்றுப் பொதுச்சீர்) | |
நிரை+நேர்+நேர்+நிரை | புளிமாந்த்தண்ணிழல் | ||
நிரை+நிரை+நேர்+நிரை | கருவிழந்த்தண்ணிழல் | ||
நேர்+நிரை+நேர்+நிரை | கூவிளந்த்தண்ணிழல் | ||
நேர்+நேர்+நிரை+நிரை | தேமாநறுனிழல் | ||
நிரை+நேர்+நிரை+நிரை | புளிமாநறுநிழல் | ||
நிரை+நிரை+நிரை+நிரை | கருவிளநறுனிழல் | ||
நேர்+நிரை+நிரை+நிரை | கூவிளநறுநிழல் |
கலிப்பாவிற்கென தனிச்சீர் இல்லை.மாச்சீர்,விளச்சீர்,காய்ச்சீர்,கனிச்சீர் இவையே விரவி வரும்.னாலசைச்சீர் வஞ்சிப்பாவில் வரும்.வெண்பாவில் நாலசைச்சீர் வாரா. ஆசிரியப்பா,கலிப்பா ஆகியவற்றுள் குற்றுகரம் வந்தாலொழிய நாலசைச்சீர் வாரா.
0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக